திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு- பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு
திருவள்ளூர், 23 ஜூன் (ஹி.ச.) திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் மஞ்சங்கரணை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கடலுணவு பதப்படுத்தும் மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தில் கடந்த ஜூன் 21-ஆம் தேதி ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு சம்பவத்தில் உயிர
அமோனியா


திருவள்ளூர், 23 ஜூன் (ஹி.ச.)

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் மஞ்சங்கரணை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கடலுணவு பதப்படுத்தும் மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தில் கடந்த ஜூன் 21-ஆம் தேதி ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதுவரை 80 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்தின் போது தொழிலாளர்கள் மூச்சுத்திணறல், கண் மற்றும் சுவாசப்பாதை எரிச்சல், இருமல், நெஞ்சுவலி உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளாகினர்.

தகவல் கிடைத்தவுடன் அவசர மருத்துவக் குழுக்கள், ஆம்புலன்ஸ்கள், மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு மற்றும் சிகிச்சை பணிகளை மேற்கொண்டனர்.

தற்போது 70 பேர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் சில தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளர்கள் எனவும், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் தொழிலாளியும் உயிரிழந்தவர்களில் ஒருவர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒடிசா, அசாம், ஜார்கண்ட், கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதுடன், தொழிற்சாலையின் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் அவசரகால செயல்திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

Hindusthan Samachar / VINOTH KUMAR P