Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 ஜூன் (ஹி.ச.)
தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கூட்டத்தொடரின் போது எதிர்க்கட்சிகளுக்குப் பதில் அளித்த முதல்வர் விஜய், மாநில அரசு மற்றும் மத்திய அரசுகளுக்கிடையிலான நிர்வாகம் மற்றும் அரசியல் நிலைப்பாடு குறித்துப் பேசினார்.
அவர் பேசுகையில்,
தமிழ், மொழி மற்றும் கலாச்சாரம் போன்றவற்றில் நாங்கள் இரட்டை வேடம் போட மாட்டோம். உலகெங்கிலும் வாழும் நம் தமிழ் மக்களுக்கு நாம் சொல்லிக்கொள்வது ஒன்று தான். தமிழ் தான் எங்கள் உயிர்நாடி என்பதை எப்போதும் மறக்க மாட்டோம்.
அதே போல, மாநில உரிமைகளில் எப்போதும் உறுதியாக இருப்போம். அதே நேரத்தில், அரசியல் என்பது வேறு, மத்திய மாநில அரசுகளுக்கிடையிலான அணுகுமுறை என்பது வேறு என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
பின்பு எதிர்க்கட்சிகளை சுட்டிக்காட்டிய முதல்வர் விஜய், அவர்கள் இருந்திருந்தால் ஒரு சைகை காட்டலாம் என்று நினைத்திருந்தேன். அவர்கள் போய்விட்டார்கள். இருப்பினும், நீங்கள் அனுமதித்தால் அந்த சைகையைக் காட்டலாம் என்று நினைக்கிறேன் என்று முதல்வர் விஜய் சபாநாயகரிடம் அனுமதி கோரினார்.
இதற்குச் சபாநாயகர் அனுமதியளித்த நிலையில், முதல்வர் விஜய் அந்த சைகையைச் செய்தார். அதாவது, தேர்தலுக்கு முன்பாக திமுக கூட்டணியில் சிக்கலான சூழல் நிலவியது. அப்போது அந்த கூட்டணி பிரச்சனையைச் சரி செய்துவிட்டு, அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘முடித்துவிட்டோம்’ என்பது போலக் கையை அசைத்து சைகைக் காட்டினார்.
அதே போல, முதல்வர் விஜயும் இன்று சட்டமன்றத்தில் கையை அசைத்து ’முடித்துவிட்டோம்’ என்பது போலச் சைகை காட்டினார்.
இந்த சம்பவத்தால் சட்டமன்றம் அதிர்ந்தது. இது சம்பந்தமான காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Hindusthan Samachar / vidya.b