Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 ஜூன் (ஹி.ச)
கடந்த மூன்று மாதங்களாக நடைபெறாமல் இருந்த சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் நாளை(ஜூன் 24 புதன்கிழமை) நடைபெற உள்ளது.
சட்டமன்றத் தேர்தல் பணிகள் காரணமாக மாமன்றக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தக் கூட்டம் நடைபெறுவதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சென்னை மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர், துணை மேயர், மண்டலத் தலைவர்கள் மற்றும் 200 வார்டு உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.
நகரின் உள்கட்டமைப்பு மேம்பாடு, குடிநீர் விநியோகம், சாலைப் பணிகள், மழைநீர் வடிகால் திட்டங்கள் மற்றும் பொது சுகாதாரம் தொடர்பான பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் 2025-2026ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் மாமன்றம் கூடவில்லை. தற்போது தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் புதிய வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
பருவமழைக்கு முன்னதாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சிங்காரச் சென்னை 2.0 திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் பொதுமக்களின் குறைகள் குறித்தும் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படும் என மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே, நாளைய கூட்டத்தின் மீது சென்னைவாசிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Hindusthan Samachar / vidya.b