Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 23 ஜூன் (ஹி.ச.)
காசோலை செல்லுபடி குறித்து திருச்சியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, மணப்பாறை விசாரணை நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய உத்தரவில் எந்தவிதமான சட்டப்பிழையும் இல்லை என்று உறுதி செய்தார்.
காசோலையில் உரிய நபரின் கையொப்பம் இருக்கும் பட்சத்தில், தேதி, தொகை உள்ளிட்ட பிற விவரங்களை வேறொருவர் பூர்த்தி செய்திருந்தாலும் அந்த காசோலை சட்டப்படி முழுமையாக செல்லுபடியாகும் என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
காசோலையை வழங்குபவர் கையொப்பமிட்டு கொடுத்துவிட்டால், அதில் உள்ள வெற்று விவரங்களை நிரப்பும் அதிகாரத்தை பெறுநருக்கு அவர் வழங்கியதாகவே சட்டம் கருதுகிறது எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.
பொதுவாக வணிகப் பரிவர்த்தனைகளின்போது கையொப்பமிடப்பட்ட வெற்று காசோலைகள் வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது. அவ்வாறு வழங்கப்படும் காசோலைகளில் பெறுநரே தேதி மற்றும் தொகையை நிரப்பிக்கொள்ள சட்டம் அனுமதிக்கிறது என்பதை இந்த தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
காசோலை மோசடி வழக்குகளில் நான் கையொப்பம் மட்டும்தான் போட்டேன், விவரங்களை நான் நிரப்பவில்லை என்ற வாதம் இனி எடுபடாது என சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
எனவே, கையொப்பமிட்ட காசோலையை வழங்கும்போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதையும், அது சட்டரீதியான பொறுப்பை உருவாக்கும் என்பதையும் இந்த தீர்ப்பு வலியுறுத்துகிறது.
Hindusthan Samachar / vidya.b