Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 ஜூன் (ஹி.ச.)
கத்தார் நாட்டின் ராஸ் லஃபான் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள தொழிற்சாலையில் கடந்த ஜூன் 21ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டம் சிதம்பராபுரம் யாக்கோபுரத்தைச் சேர்ந்த பபித் (26), பணகுடி சிவகாமிபுரத்தைச் சேர்ந்த சஜித்குமார் (25) மற்றும் அழகியநம்பியாபுரத்தைச் சேர்ந்த சுவின் (24) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த துயரச் சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவாக தமிழ்நாட்டிற்கு கொண்டு வர இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் க. தென்னரசுவுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ