ஜூலை 1 ஆம் தேதி மின் கட்டணம் உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு - மின்சார வாரியம் தகவல்
தமிழ்நாடு, 23 ஜூன் (ஹி.ச.) தமிழகத்தில் ஜூலை 1 முதல் மின்கட்டணம் உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மின்கட்டண திருத்தம் தொடர்பாக இதுவரை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அதிகாரப்
மின்சார வாரியம்


தமிழ்நாடு, 23 ஜூன் (ஹி.ச.)

தமிழகத்தில் ஜூலை 1 முதல் மின்கட்டணம் உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மின்கட்டண திருத்தம் தொடர்பாக இதுவரை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாத நிலையில், கட்டண உயர்வு நடைமுறைக்கு வருவது சந்தேகமாகியுள்ளது.

மின்கட்டண மாற்றம் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டிருந்தாலும், புதிய கட்டண விகிதங்கள் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. மேலும், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகப் பொறுப்புகள் காலியாக இருப்பதும் முடிவெடுப்பதில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், இந்த ஆண்டுக்கான மின்கட்டண உயர்வை மேற்கொள்ள தமிழ்நாடு மின்சார வாரியம் இதுவரை ஒழுங்குமுறை ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், ஆணையமும் தன்னிச்சையாக கட்டண உயர்வை மேற்கொள்ளும் சூழ்நிலை தற்போது இல்லை என கூறப்படுகிறது.

தமிழகத்தில் மின்கட்டண உயர்வு மேற்கொள்ளப்படும்போது, அது 6 சதவீதத்தை மீறக்கூடாது அல்லது ஏப்ரல் மாத நுகர்வோர் விலைக்குறியீட்டு (CPI) உயர்வில் எது குறைவோ அதனை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது.கடந்த ஆட்சிக் காலத்தில் 2022, 2023, 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் மின்கட்டணம் திருத்தப்பட்டிருந்தது.

குறிப்பாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாத நுகர்வோர் விலைக்குறியீட்டு உயர்வு 3.16 சதவீதமாக இருந்ததால் அதே அளவுக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட்டது.

மேலும், சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வீடுகளுக்கான மின்கட்டண உயர்வால் பொதுமக்களுக்கு கூடுதல் சுமை ஏற்படாத வகையில், உயர்வுக்கான தொகையை அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது ஏப்ரல் மாத நுகர்வோர் விலைக்குறியீட்டு உயர்வு 3.48 சதவீதமாக கணக்கிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் நிர்வாக ரீதியான காலிப்பணியிடங்கள் நீடிப்பதால், மின்கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பு உடனடியாக வெளியாக வாய்ப்பில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Hindusthan Samachar / GOKILA arumugam