Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 ஜூன் (ஹி.ச)
சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில், முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு 1003 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று சென்னை நார்த்வால் சாலையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி., பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்,
திமுக என்பது ஒரு அரசியல் கட்சி மட்டுமல்ல, தலைமுறை தலைமுறையாக மக்களின் வாழ்க்கையோடு இணைந்த குடும்ப இயக்கம் என்று குறிப்பிட்டார். தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் என் குடும்பம் இருக்கிறது என்ற கலைஞரின் வார்த்தைகளை நினைவுகூர்ந்த அவர், திமுகவின் பலம் அதன் உடன்பிறப்பு உறவுகள்தான் என்றார்.
பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான அடித்தளத்தை அமைத்தது திமுக அரசுகள்தான் என்றும், இன்று தமிழ்நாட்டில் 42 சதவீத பெண்கள் பணியாற்றும் நிலை உருவாக காரணம் திராவிட இயக்கக் கொள்கைகளே என்றும் தெரிவித்தார்.
திருநங்கைகளுக்கான நல வாரியம், பாலின மாற்று அறுவைச் சிகிச்சைக்கான அரசு மருத்துவ வசதிகள், மாற்றுத் திறனாளிகள், தொழுநோயாளிகள் மற்றும் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியவர் கலைஞர் கருணாநிதி என அவர் புகழாரம் சூட்டினார்.
மேலும், கண்ணொளித் திட்டம் உள்ளிட்ட பல மக்கள் நலத் திட்டங்கள் கலைஞரின் சமூக அக்கறையின் வெளிப்பாடுகள் என்றும், அதே வழியில் காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய கனிமொழி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் திட்டங்கள் வெறும் தேர்தல் வாக்குறுதிகள் அல்ல; மக்களின் வாழ்க்கையை மாற்றும் சமூக மாற்றத் திட்டங்கள். கல்வி, உரிமை, சுயமரியாதை, மொழி மற்றும் அடையாளத்தை பாதுகாக்கும் உணர்வை மக்களிடம் விதைத்த இயக்கம் திமுக என்றார்.
மேலும், ஆட்சி பொறுப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த தமிழ்நாட்டில் திமுகவின் ஆட்சிதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாங்கள் போட்ட பாதையில்தான் யாராக இருந்தாலும் பயணிக்க முடியும். அதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட தலைவராக கலைஞர் விளங்கியதாக குறிப்பிட்ட அவர், ஊடகங்களின் கேள்விகளுக்கு எந்த தயக்கமும் இன்றி பதிலளித்த தலைவரின் அரசியல் பண்பை நினைவுகூர்ந்தார்.
மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தயாராக இருப்பதே உண்மையான ஜனநாயகத் தலைமையின் அடையாளம் என்றும் அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ