Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 23 ஜூன் (ஹி.ச.)
சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜயின் பதிலுரை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த விமர்சனங்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் கடுமையான பதிலடி கொடுத்துள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் எக்ஸ் தளப் பதிவில்,
முதல்வர் சினிமா பாணியில் பேசுகிறார் என்று விமர்சிக்கும் எதிர்க்கட்சித் தலைவர், சட்டப்பேரவையில் பக்கம் பக்கமாக எழுதப்பட்ட குறிப்புகளை வைத்துக்கொண்டு பேசியதோடு, செய்தியாளர் சந்திப்பிலும் எழுதி வைத்த உரையை வாசித்தது வேடிக்கையாக உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் பாதுகாப்பு, மின்வெட்டு மற்றும் சட்டம்-ஒழுங்கு தொடர்பாக முதலமைச்சர் சட்டப்பேரவையில் தெளிவான விளக்கங்களை வழங்கியதாகவும், அதனை பொருட்படுத்தாமல் எதிர்க்கட்சித் தலைவர் அரசியல் விமர்சனங்களில் ஈடுபட்டு வருவதாகவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போராட்டங்களை தூண்டிவிடும் அரசியல் குறித்து முதலமைச்சர் பேசிய கருத்தை தவறாகப் புரிந்துகொண்டு திமுக விமர்சிப்பதாகவும், கட்சி நிதி குறித்த கேள்வி எழுப்பப்பட்டவுடன் திமுக பதற்றமடைவதாகவும் தமிழக வெற்றிக் கழகம் குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், “மக்களால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட திமுக, தற்போது ஆட்சி நிர்வாகம் குறித்து விமர்சிப்பது முரண்பாடானது” என்றும், “முதல்வர் முன்வைக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்காமல் தனிப்பட்ட தாக்குதல்களில் திமுக ஈடுபடுகிறது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் முதலமைச்சரின் உரை திமுகவுக்கு அரசியல் ரீதியாக பதிலடி கொடுத்துள்ளதாகவும், ஆட்சி அதிகாரத்தை இழந்த விரக்தியில்தான் எதிர்க்கட்சி செயல்பட்டு வருவதாகவும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
இறுதியாக, “மக்கள் வழங்கிய ஆணையுடன் செயல்பட்டு வரும் தமிழக வெற்றிக் கழக அரசின் செயல்பாடுகளுக்கு பதிலாக, ஆதாரப்பூர்வமான விவாதங்களை நடத்த எதிர்க்கட்சி முன்வர வேண்டும்” என தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ