Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி , 23 ஜூன் (ஹி.ச.)
உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் முழுவீச்சில் தொடங்கப்பட்டுள்ளன.
மாநில வனத்துறையினர் இந்த நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களின் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர் பகுதிகளில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த ஆக்கிரமிப்புகள் தற்போது அடையாளம் காணப்பட்டு அகற்றப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சேர்வலாறு மற்றும் பாபநாசம் வனப்பகுதிகளில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்களுக்கு அதிகாரிகள் ஏற்கெனவே நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில்,
சேர்வலாறு மற்றும் பாபநாசம் பகுதிகளில் மட்டும் சுமார் 10 ஹெக்டேர் பரப்பளவிலான வனநிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக அறிவிப்பாணைகள் வழங்கப்பட்டுள்ளன. நோட்டீஸ் வழங்கப்பட்ட நாளில் இருந்து 15 நாட்களுக்குள் ஆக்கிரமிப்பாளர்கள் தாமாக முன்வந்து வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாவிட்டால், வனத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து காவல்துறை பாதுகாப்புடன் நேரடியாகக் களமிறங்கி ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேற்குத் தொடர்ச்சி மலை, உலகின் பல்லுயிர் பெருக்க மையங்களில் ஒன்றாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் தொடரும் ஆக்கிரமிப்புகள் வனவிலங்குகளின் வாழ்விடத்திற்கும், நீராதாரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்தன.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, சூழலியல் பாதுகாப்பிற்கு கிடைத்த முக்கிய வெற்றியாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.
இந்த நடவடிக்கை தொடர்ந்து மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என வனத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / vidya.b