குடியாத்தம் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து - சுவற்றை உடைத்து பெண் தொழிலாளி மீட்பு
வேலூர், 23 ஜூன் (ஹி.ச.) வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள காத்தாடிகுப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கிய பெண் தொழிலாளியை பொதுமக்கள் சுவற்றை உடைத்து மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள
தீ விபத்து


வேலூர், 23 ஜூன் (ஹி.ச.)

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள காத்தாடிகுப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கிய பெண் தொழிலாளியை பொதுமக்கள் சுவற்றை உடைத்து மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காத்தாடிகுப்பம் பகுதியில் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான எம்.கே. இண்டஸ்ட்ரீஸ் தீப்பெட்டி தொழிற்சாலையில் இன்று சுமார் 10 தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதால், கணநேரத்தில் புகை மண்டலம் சூழ்ந்தது.

இதையடுத்து தொழிலாளர்கள் அனைவரும் அலறியடித்தபடி வெளியேறினர். ஆனால் பரிமளா என்ற பெண் தொழிலாளி மட்டும் உள்ளே சிக்கிக் கொண்டார். இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் தொழிற்சாலையின் சுவற்றை உடைத்து, உள்ளே சிக்கியிருந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர். பின்னர் அவர் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த குடியாத்தம் தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து குடியாத்தம் தீயணைப்புத் துறையினரும், போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுவற்றை உடைத்து பெண் தொழிலாளியை மீட்ட சம்பவத்தின் காட்சிகள் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தின.

Hindusthan Samachar / VINOTH KUMAR P