’ஹபீபி’ படத்தைப் பார்த்து என் மகள் விமல கீதா அழுது விட்டார் - கஸ்தூரிராஜா!
சென்னை, 23 ஜூன் (ஹி.ச.) நேசம் எண்டர்டெயின்மெண்ட், ஜிகேஎஸ் ப்ரோஸ் புரொடக்ஷன்ஸ் & ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான ‘ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நட
க


சென்னை, 23 ஜூன் (ஹி.ச.)

நேசம் எண்டர்டெயின்மெண்ட், ஜிகேஎஸ் ப்ரோஸ் புரொடக்ஷன்ஸ் & ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான ‘ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில்,பாடலாசிரியர் யுகபாரதி பேசியதாவது,

உதவி இயக்குநராக இருந்த போதிருந்தே மீரா கதிரவனை எனக்கு தெரியும். தனிப்பட்ட முறையில் இப்படியான வெற்றிக்குதான் இத்தனை வருடங்களாக அவர் கடுமையாக உழைத்தார்.

இதனை சாத்தியப்படுத்திய அனைவருக்கும் நன்றி. குறிப்பாக, கஸ்தூரி ராஜா அவர்களை நடிகராக பார்ப்பது மகிழ்ச்சி. இனி வரும் வெற்றிப் படங்களில் எல்லாம் கஸ்தூரி ராஜாதான் அப்பாவாக தப்பாமல் இருப்பார்.

இப்படி ஒரு படம் தமிழ் சினிமாவில் வரவில்லை எனும் சொல்லுமளவுக்கு இஸ்லாமியர்கள் வாழ்வியலை இந்தப் படத்தில் மீரா கதிரவன் பேசியிருக்கிறார். தமிழ் சினிமாவில் எண்பதுகளுக்கு பிறகு இஸ்லாமியர்களை ஏன் தீவிரவாதிகளாக காட்டுகிறார்கள் என்ற விவாதம் நடந்தது.

அப்பொழுது தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநர்கள் அனைவரும், இஸ்லாமியர்கள் வாழ்வை நெருக்கமாக தெரிந்தவர்கள் தான் அவர்கள் குறித்த உண்மையான படம் எடுக்க முடியும். அதனால், மீரா கதிரவனை படம் எடுக்கச் சொன்னார்கள்.

அப்போது அவர் சம்மதம் தெரிவித்து மனதில் தாங்கிய கதையே 'ஹபீபி!' ஆறு ஆண்டுகளுக்கு பிறகு இது படமாக வெளிவந்து வெற்றி பெற்றிருப்பது நிறைவாக உள்ளது என்றார்.

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா,

எந்த ஒரு கருத்தையும் வலியுறுத்தாமல் நேரில் பார்த்து, அனுபவித்த வாழ்கையை திரைப்படமாக்கி இருக்கிறார் மீரா கதிரவன். இந்தப் படம் எல்லோருக்கும் தேவை என்பதை உணர்ந்தே அண்ணன் திரைக்கதை எழுதி இருக்கிறார்.

வன்முறையை கொண்டாடக்கூடிய, அதை நம் இயல்பாக கூடிய, பேரின்பம் அடையும் காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இதற்கிடையில் நம் அனைவரையும் ஆற்றுப்படுத்தும் படமாக 'ஹபீபி' வந்திருக்கிறது. வசூலிலும் இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறும் போது தான் அடுத்தடுத்து இது போன்ற படங்கள் நிறைய வரும். நிச்சயம் பார்க்காதவர்கள் திரையரங்குகளில் சென்று பாருங்கள் என்றார்.

நடிகை அனுஸ்ரேயா ராஜன் பேசியதாவது,

இந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுத்து வரும் ஆதரவு நிறைவாக உள்ளது, அனைவருக்கும் நன்றி என்றார்.

நடிகை மாளவிகா மனோஜ் பேசியதாவது,

என்னுடைய முதல் படம் இது. இத்தனை வருடங்களுக்கு பின்பு வெளியாகி, இத்தனை பேரின் அன்பை சம்பாதித்திருப்பது நிறைவாக உள்ளது, நன்றி.

நடிகர் ஈசா பேசியதாவது,

இந்தப் படம் வெளியான பிறகு பலரும் என்னை அடையாளம் கண்டு வாழ்த்துகிறார்கள். தங்கள் வீட்டு பிள்ளைபோல அன்பு காட்டுகிறார்கள்.

வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கு நன்றி. படத்தை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்த ஊடகத்திற்கும், படத்தில் என்னுடன் நடித்த நடிகர்களுக்கும் நன்றி என்றார்.

நடிகை ஜெயஸ்ரீ பேசியதாவது,

இந்தப் படத்தில் இவ்வளவு பெரிய கதாபாத்திரம் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை. வாய்ப்புக்கு நன்றி என்றார்.

நடிகை மலர் பேசியதாவது,

இந்த கதாபாத்திரத்திற்கு என்னை தேர்வு செய்த இயக்குநர் மீரா கதிரவனுக்கு நன்றி. நான் ஒரு யூடியூபர். படத்தில் என்னை பார்த்து அடையாளம் கண்டுவிட்டு பலரும் பாராட்டுகளை தெரிவித்தார்கள். நீங்களும் படத்தை இன்னும் நிறைய பேருக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும். நன்றி.

நடிகர் கெளஷிக் பேசியது,

இது என்னுடைய முதல் படம். வாய்ப்பு கொடுத்த மீரா கதிரவன் அவர்களுக்கும் ஒத்துழைப்பு தந்த படக்குழுவினருக்கும் நன்றி.

நடிகர் சன் சாகுல் பேசியது,

ஊடகத்துறையும் சினிமாவும் எனக்கு குடும்பம் போல! இது என் மண் சார்ந்த கதை என்பதால் தான் இந்த படத்திற்கு உள்ளே வந்தேன்.

மண் சார்ந்த படம் என்பதை தாண்டி இஸ்லாமிய வாழ்வியலை சொல்லக்கூடிய படம் இது எனலாம். உறவுமுறை, சுகம், துக்கம் என அனைத்தையும் இந்த படம் பேசி இருப்பதால் உலகமே இதை கொண்டாடுகிறது. வாய்ப்புக்கு நன்றி.

இயக்குநர் தமிழ் பேசியதாவது,

முழு நீள இஸ்லாமியர் படம் தமிழ் சினிமாவில் வருவதற்கு 100 ஆண்டுகள் ஆகியிருக்கிறது.

எந்தவொரு புனைவும் இல்லாமல் உண்மையான வாழ்க்கை முறையை திரையில் காட்டியதற்கு தைரியம் வேண்டும். நடிகர்கள் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். படம் பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இயக்குநர் ராஜூமுருகன் பேசியதாவது,

மீரா எனக்கு பல வருட நண்பர். தமிழில் அவர் இயக்கிய படங்கள் அனைத்தும் முக்கியமானவை. நல்ல சினிமாவுக்கும் வியாபாரத்திற்கும் இடையில் அவர் போராடிக் கொண்டே இருக்கிறார்.

அவருக்கு முழுமையான வெற்றியை ஹபீபி தேடி தந்திருக்கிறது. தமிழ் இலக்கியத்தில் இஸ்லாமியர்களுக்கு மிகப்பெரிய வரலாறு உண்டு. சீறாப்புராணத்தில் தொடங்கி தோப்பில் முகமது மீரான் வரை பெரிய வரலாறு உண்டு.

தமிழக அரசியல் வரலாற்றிலும் இஸ்லாமியர்கள் பங்கு உண்டு. ஆனால் தமிழ் சினிமாவில் மட்டும் அது நடக்காமல் போய்விட்டது என்ற வருத்தம் உண்டு. மனிதர்களாக அவர்களை காட்டுவதும், அவர்களது வாழ்க்கை முறை உணர்வுகளை அப்படியே திரையில் பிரதிபலிப்பதும் தான் என்னை பொறுத்தவரை உண்மையான தலித் சினிமா, இஸ்லாமிய சினிமா. தமிழ் சினிமாவின் தொடக்கமாக 'மெட்ராஸ்' படத்தை பார்க்கிறேன். அது போல தான் இஸ்லாமிய சினிமாவின் தொடக்கமாக இந்த 'ஹபீபி' உள்ளது. இவ்வளவு இரைச்சல்களுக்கு மத்தியில் இந்த படம் வெற்றி பெற்றிருப்பதை மிகப்பெரிய நம்பிக்கையாக பார்க்கிறேன். நூறு வருடங்களுக்குப் பிறகு இந்த படம் மிகப்பெரிய திறப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதிலிருந்து நிறைய சமூக சினிமாக்கள் வரட்டும். இந்த படத்தில் கஸ்தூரி ராஜா சார் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இதுபோல நிறைய படைப்புகள் மீரா தர வேண்டும்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியது,

கஸ்தூரிராஜா சாரை இயக்குநராக எனக்கு தெரியும். அவரை இந்த படத்தில் நடிகராக பார்த்து பிரம்மித்து விட்டேன். நல்ல படங்களை நிச்சயம் பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்வார்கள். சினிமா மீது மக்களுக்கு பெரும் நம்பிக்கை உண்டு.

அதை புரிந்து கொண்டு சமூக பொறுப்போடு படம் எடுப்பது நமது கடமை. இதை இஸ்லாமிய படமாக பார்க்கத் தேவையில்லை. தமிழ் சமூகத்தில் இன்னொரு மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட ஒரு இனத்துடைய படம் தான் இது. இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்ததில் சினிமாவிற்கு பெரும் பங்கு உண்டு. அந்த வருத்தத்தை போக்க இந்த படத்தை பெரும் வெற்றி பெற செய்ய வேண்டும்.

இயக்குநர், நடிகர் கஸ்தூரி ராஜா பேசியதாவது,

இந்தப் படத்தில் என்னை சுதந்திரமாக நடிக்க அனுமதித்த என் மனைவிக்கு முதல் நன்றி. என்னுடன் நடித்த அனைத்து நடிகர்களின் ஒத்துழைப்பிற்கும் நன்றி.

படம் வெளியானதும் என் மகன்கள், மகள்கள், பேரன் பேத்திகள் என அனைவரோடும் பார்த்தேன். என் மகள் விமல கீதா அழுதுவிட்டார். தனுஷ் படம் பார்த்துவிட்டு எனக்கு கௌரவமான ஒரு படத்தில் நடித்துள்ளீர்கள் என்றார்.

இந்தப் பெயரை வாங்கித் தந்த மீரா கதிரவனுக்கு நன்றி. இந்த படமும் யூசுப் கதாபாத்திரமும் எனக்கு இன்னொரு பிறவி. இஸ்லாமியராக நான் நிஜத்திலும் மாறிவிட்டேனோ என எனக்கு தோன்றும்.

இயக்குநராக கஸ்தூரிராஜா என்ற பெயரும் நடிகருக்கு யூசுப் என்ற பெயரும் வைக்கலாமோ எனவும் அடிக்கடி தோன்றும். மீரா கதிரவனுக்குப் பின்னால் இந்த படம் உருவாவதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. பல விருதுகள் இந்தப் படம் வாங்கி குவிக்கும் என்றார்.

Hindusthan Samachar / Durai.J