Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 ஜூன் (ஹி.ச.)
கடந்த திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாக துறையில் 2,538 உதவிப் பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட பணி நியமனத்துக்கு ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாகக் கூறி, இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்யும்படி தமிழக டிஜிபி-க்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது.
அந்த கடிதத்தின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என அதிமுக எம்.பி. இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அமலாக்கத்துறை கடிதத்தின் அடிப்படையில் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
ஆனால், வழக்குப்பதிவு செய்யாததை எதிர்த்து இன்பதுரை தரப்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதே போல வழக்குப்பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழக அரசும், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தரப்பிலும் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அனைத்து வழக்குகளையும் விசாரித்த நீதிமன்றம், ஜூன் 23ஆம் தேதி வரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தது. இதனிடையே, மோசடி புகார் தொடர்பாக கே.என் நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து, வழக்குப்பதிவு செய்தது குறித்து கே.என்.நேரு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதைக் கேட்ட நீதிமன்றம், அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்ததுடன், ஜூன் 23ஆம் தேதி வரை லஞ்ச ஒழிப்புத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என மீண்டும் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள் முருகன் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என கடந்த ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை திரும்பப் பெற உள்ளோம் என தெரிவித்தார்.
மேலும், முறைகேடு வழக்கை புதிய அரசு தொடர்ந்து நடத்த இருப்பதால், மறு ஆய்வு மனுவை திரும்பப் பெறு முடிவு செய்யப்பட்டது. இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என தெரிவித்தார்.
இதற்கு, முன்னாள் அமைச்சர் கே.என் நேரு தரப்பில், அரசின் நிலை திடீரென மாறியுள்ளதை கவனிக்க வேண்டும். முறைகேடுகள் ஏதும் இல்லை என லஞ்ச ஒழிப்புத்துறையால் வழக்கு விசாரணை முடிக்கப்பட்ட நிலையில், ஆட்சி மாற்றத்திற்குப் பின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆட்சி மாறியதால் உள்நோக்கத்துடன் ஆதாரம் இல்லாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் நடத்தப்பட்ட விசாரணையில் முறைகேடுகளுக்கு ஆதாரம் இல்லை என்பதால் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. ஆட்சி மாறினாலும் நடந்து முடிந்த விசாரணையை மாற்ற முடியாது என உச்சநீதிமன்ற தீர்ப்புகள் உள்ளன. அதனால் மறு ஆய்வு மனுவை திரும்பப் பெற அனுமதிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “மறு ஆய்வு மனுவை திரும்பப் பெறுவதை அனுமதிப்பதா? என இறுதி விசாரணையில் தான் முடிவு செய்ய முடியும். எந்த ஆதாரங்களின் அடிப்படையில் மறு ஆய்வு திரும்பப் பெறப்படுகிறது? என விசாரணையில் தான் முடிவு செய்ய முடியும்.
அதனால், முதலில் மறுஆய்வு மனு திரும்ப பெறுவது குறித்து விசாரிக்கப்படும். பின்னர், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குறித்து விசாரணை செய்யப்படும் என தெரிவித்து, விசாரணையை ஜூலை 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN