Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 23 ஜூன் (ஹி.ச.)
கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
நேற்று வினாடிக்கு 1,365 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று 1,488 கனஅடியாக உயர்ந்துள்ளது. 44.28 அடி மொத்த கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 42.48 அடியாக பதிவாகியுள்ளது.
.அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் 1,488 கனஅடி உபரி நீரும் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அணையிலிருந்து வெளியேறும் தென்பெண்ணை ஆற்று நீரில் வெள்ளை நிற இரசாயன நுரைகள் பனிப்பாறைகளைப் போல் குவிந்து மிதந்து செல்வது பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆற்றங்கரையோர பகுதிகளிலும், சாலையோரங்களிலும் நுரை பரவி காணப்படுவதுடன், கடுமையான துர்நாற்றமும் வீசுவதாக கூறப்படுகிறது.
கர்நாடக எல்லைப்பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளிலிருந்து சுத்திகரிக்கப்படாத இரசாயனக் கழிவுகள் ஆற்றில் கலப்பதே இந்த நச்சு நுரைக்கு காரணமாக இருக்கலாம் என பொதுமக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
பல நாட்களாக தொடர்ந்து ஆற்றில் நுரை பெருக்கெடுத்து ஓடுவதால், பாசன நிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும், சாலையோரங்களில் பறக்கும் நுரைகள் இருசக்கர வாகன ஓட்டிகளின் முகத்தில் படுவதால் போக்குவரத்து பாதுகாப்பு குறித்த அச்சமும் அதிகரித்துள்ளது.
எனவே, நீர்வளத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் உடனடியாக கூட்டு ஆய்வு மேற்கொண்டு, ஆற்று நீர் மாசுபாட்டிற்கான காரணத்தை கண்டறிந்து, மாசுபாட்டை தடுக்கவும், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் அச்சத்தை போக்கவும் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒசூர் பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam