Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 ஜூன் (ஹி.ச.)
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர், முதலமைச்சர் விஜயின் சட்டப்பேரவை பதிலுரையை கடுமையாக விமர்சித்தார்.
ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பதிலளித்த முதலமைச்சர், முதலமைச்சருக்குரிய பொறுப்புணர்வுடன் செயல்படவில்லை என்றும், இன்னும் தேர்தல் பிரச்சார மனநிலையிலேயே இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
சட்டமன்றத்தை ஷூட்டிங் ஸ்பாட்டாக நினைத்து செயல்படுகிறார் என்று விமர்சித்தார்.
பெண்கள் மீதான வன்முறை, சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் போன்ற முக்கிய விவகாரங்களுக்கு முதலமைச்சர் பதிலளிக்கவில்லை என்றும், திமுக மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து திசைதிருப்ப முயற்சிப்பதாகவும் கூறினார்.
மேலும், “நிதிநிலை அறிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்ட அரசு, பார்ட்டி பண்ட் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுமா? ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்; நடவடிக்கை எடுங்கள். அதை எதிர்கொள்ள திமுக தயாராக இருக்கிறது” என்று சவால் விடுத்தார்.
முதலமைச்சர் தனது உரைகளில் தொடர்ந்து ‘குட்டிக்கதைகள்’ கூறுவதாக விமர்சித்த சிவசங்கர், “முதலமைச்சர் வாய் திறந்து பேசினால் சட்டம்-ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து பேச வேண்டும். ஆனால் அவற்றை தவிர்த்து வேறு விஷயங்களைப் பேசுகிறார்” என்றார்.
திமுக மீது வழக்குகள் தொடர்வதாக கூறப்படுவது குறித்து பேசிய அவர், “ஒடுக்குமுறைகளையும் அரசியல் பழிவாங்கல்களையும் சந்தித்து வளர்ந்த இயக்கம் திமுக. எத்தகைய வழக்குகளையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்” என்றார்.
முதலமைச்சரை நோக்கி, “உங்கள் மீது கருப்புப் பணத்தில் திரைப்பட சம்பளம் பெற்றதாக புகார்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதுகுறித்து நீங்கள் விளக்கம் அளிக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.
மேலும், “அல்லு அர்ஜுன் மீது வழக்கு தொடரப்பட்டதைப் போல உங்கள் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தால், உங்கள் சினிமா வாழ்க்கையின் உச்சம் கலைந்திருக்குமே” என்று விமர்சித்தார்.
இறுதியாக, “திமுகவின் ஆதரவு வாக்குகளால் வெற்றி பெற்ற கூட்டணி உறுப்பினர்களின் ஆதரவோடு தான் தற்போதைய அரசு செயல்படுகிறது. மக்களை கவரும் வசனங்களால் அல்ல, பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நிர்வாகத்தால் தான் அரசு மதிப்பிடப்படும்” என்று சிவசங்கர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ