பழனி இடும்பன் கோயில் நகைகள் திருட்டு வழக்கு - குற்றவாளிகளை கண்டறிந்து சொத்துகளை மீட்க நீதிமன்றம் உத்தரவு
மதுரை, 23 ஜூன் (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம் பழனி இடும்பன் கோயில் மற்றும் விக்னேஸ்வரா குழுமத்துக்கு சொந்தமான கோயில்களின் நகைகள் மற்றும் சொத்துகளை மீட்டு முறையாக பராமரிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்
பழனி இடும்பன் கோயில் நகைகள் திருட்டு வழக்கு - குற்றவாளிகளை கண்டறிந்து சொத்துகளை மீட்க நீதிமன்றம் உத்தரவு


மதுரை, 23 ஜூன் (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம் பழனி இடும்பன் கோயில் மற்றும் விக்னேஸ்வரா குழுமத்துக்கு சொந்தமான கோயில்களின் நகைகள் மற்றும் சொத்துகளை மீட்டு முறையாக பராமரிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இன்றைய இவ்வழக்கு விசாரணையின் போது, கோயிலுக்கு சொந்தமான விலைமதிப்பற்ற நகைகளை திருடியவர்களை உடனடியாக கண்டறிந்து, திருடப்பட்ட நகைகள் அனைத்தையும் மீட்க வேண்டும் என நீதிமன்றம் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது.

மேலும், இந்த வழக்கில் விசாரணை அதிகாரி இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான நிலை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கோயில் சொத்துகளை சரிபார்ப்பது மற்றும் பாதுகாப்பது தொடர்பாக ஏற்கனவே ஏதேனும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருந்தால், அவற்றை தொய்வின்றி தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

பாரம்பரியமும் பக்தர்களின் நம்பிக்கையும் கொண்ட பழனி இடும்பன் கோயிலின் சொத்துகளை பாதுகாப்பது அறநிலையத்துறையின் முக்கிய கடமை என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த உத்தரவு கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பதற்கும், திருட்டு சம்பவங்களை தடுப்பதற்கும் வழிவகுக்கும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b