கோவையில் ரூ.10 கோடி மோசடி - குஜராத் தங்க வியாபாரிகள் இருவர் மீது போலீஸ் தீவிர வலைவீச்சு
கோவை, 23 ஜூன் (ஹி.ச) குஜராத்தைச் சேர்ந்த குமார் சோனி மற்றும் விஜய் அம்பாலால் சோனி ஆகிய இருவரும் கடந்த சில மாதங்களாக கோவை பெரிய கடை வீதி பகுதியில் உள்ள மொத்த தங்க வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளனர். நம்பிக்கையின் அடிப்படையில் பல கிலோ
கோவையில் ரூ.10 கோடி மோசடி - குஜராத் தங்க வியாபாரிகள் இருவர் மீது போலீஸ் தீவிர வலைவீச்சு


கோவை, 23 ஜூன் (ஹி.ச)

குஜராத்தைச் சேர்ந்த குமார் சோனி மற்றும் விஜய் அம்பாலால் சோனி ஆகிய இருவரும் கடந்த சில மாதங்களாக கோவை பெரிய கடை வீதி பகுதியில் உள்ள மொத்த தங்க வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளனர்.

நம்பிக்கையின் அடிப்படையில் பல கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகளை வாங்கிய இவர்கள், அதற்கான பணத்தை திருப்பி செலுத்தாமல் தலைமறைவாகியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட வியாபாரிகள் அளித்த புகாரின்படி, மோசடி செய்யப்பட்ட தொகை சுமார் ரூ.10 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

பணம் கேட்டு தொடர்பு கொண்டபோது இருவரது செல்போன்களும் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த வியாபாரிகள் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், குஜராத்தைச் சேர்ந்த குமார் சோனி மற்றும் விஜய் அம்பாலால் சோனி ஆகியோரை தேடி வருகின்றனர்.

இருவரும் குஜராத்திற்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை அமைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், அவர்களது வங்கிக் கணக்குகள் மற்றும் பரிவர்த்தனைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

தென்னிந்தியாவின் முக்கிய தங்க வர்த்தக மையமாக விளங்கும் கோவை பெரிய கடை வீதியில் இவ்வளவு பெரிய தொகைக்கு மோசடி நடந்திருப்பது வியாபாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b