Enter your Email Address to subscribe to our newsletters

ரஷ்யா, 23 ஜூன் (ஹி.ச.)
ரஷ்யாவின் Tu-160 ஏவுகணை தாங்கி குண்டுவீச்சு விமானங்கள் பாரென்ட்ஸ் கடல் மற்றும் நார்வே கடலின் நடுநிலை வான்பரப்பில் 16 மணி நேரம் நீடித்த சோதனைப் பறப்பை வெற்றிகரமாக நடத்தியுள்ளன.
இந்தப் முயற்சியின் போது வானிலேயே எரிபொருள் நிரப்பும் சோதனையும் மேற்கொள்ளப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இன்று அதிகாலை டெலிகிராம் பதிவில் தெரிவித்துள்ளது.
இது வழக்கமான சோதனை முயற்சி என அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
Tu-160 விமானங்களுக்கு ரஷ்யாவின் MiG-31 போர் விமானங்கள் பாதுகாப்பு அளித்தன. மேலும் இச்சோதனை முயற்சியின் சில கட்டங்களில் வெளிநாட்டு போர் விமானங்களும் உடன் வந்ததாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த விமானங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவை என்ற விவரத்தை ரஷ்யா வெளியிடவில்லை.
Tu-160 விமானங்கள் “வெள்ளை அன்னம்” என்று அழைக்கப்படுகின்றன. இவை உலகின் மிகப்பெரிய, அதிவேக குண்டுவீச்சு விமானங்களில் ஒன்றாகும்.
அணு ஆயுதங்கள் மற்றும் நீண்ட தூர சீர்வேக ஏவுகணைகளை சுமந்து செல்லும் திறன் கொண்டவை. 16 மணி நேர தொடர் பறப்பும், வானில் எரிபொருள் நிரப்புதலும் ரஷ்யாவின் நீண்டதூர தாக்குதல் திறனை சோதிக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
பாரென்ட்ஸ் கடலும் நார்வே கடலும் நேட்டோ உறுப்பு நாடுகளான நார்வே மற்றும் பின்லாந்தின் வடக்கு எல்லைகளை ஒட்டி அமைந்துள்ளன.
நடுநிலை வான்பரப்பில் நடந்தாலும், நேட்டோ நாடுகள் இதுபோன்ற ரஷ்ய விமானப் பறப்புகளை உன்னிப்பாக கண்காணிப்பது வழக்கம். பதற்றமான அரசியல் சூழலில் இந்த சோதனை முயற்சி நடந்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
ரஷ்யா தனது குண்டுவீச்சு விமானங்களை அடிக்கடி ஆர்க்டிக், அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பகுதிகளில் பறக்கவிட்டு பயிற்சி மேற்கொள்கிறது.
இது தனது அணுசக்தி தடுப்பு படைகளின் தயார்நிலையை உறுதி செய்வதற்கான நடவடிக்கை என மாஸ்கோ கூறுகிறது.
Hindusthan Samachar / vidya.b