18,107 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உடனடியாக நிரப்ப வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை, 23 ஜூன் (ஹி.ச.) தமிழக அரசுப் பள்ளிகளில் 18,107 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது ஏழை மாணவர்களின் கல்வியை கடுமையாக பாதிக்கும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிக்கல்வித் துறையின் ம
அன்புமணி


சென்னை, 23 ஜூன் (ஹி.ச.)

தமிழக அரசுப் பள்ளிகளில் 18,107 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது ஏழை மாணவர்களின் கல்வியை கடுமையாக பாதிக்கும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பள்ளிக்கல்வித் துறையின் மொத்த 1,14,248 ஆசிரியர் பணியிடங்களில் 96,141 ஆசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ளதாகவும், மீதமுள்ள 18,107 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதில் 7,252 பட்டதாரி ஆசிரியர்கள், 2,833 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும், பல ஆண்டுகளாக காலியாக இருந்த ஆசிரியர் பணியிடங்கள் ரத்து செய்யப்பட்ட பின்னரும் இவ்வளவு பணியிடங்கள் காலியாக இருப்பது கவலைக்குரியது என்றும், தொடக்கக் கல்வித் துறையிலும் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறைகளை சேர்த்து சுமார் 34 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 12 ஆண்டுகளில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் புதிய நியமனங்கள் மிகவும் குறைவாக உள்ளதாகவும், இதனால் அரசுப் பள்ளிகளின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஆசிரியர் பற்றாக்குறை, அடிப்படை கட்டமைப்பு வசதிகளின் குறைபாடு ஆகிய காரணங்களால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே, அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் தமிழக அரசு தாமதமின்றி நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam