Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 23 ஜூன் (ஹி.ச.)
தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டத்தில் கிரீன்ஃபீல்ட் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று மாநில அமைச்சர்கள் தும்மல நாகேஸ்வர ராவ், உத்தம் குமார் ரெட்டி ஆகியோர், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை மந்திரி கிஞ்சராபு ராம்மோகன் நாயுடுவை சந்தித்து வலியுறுத்தினர்.
கொத்தகுடேம் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்காக மாநில அரசு ஏற்கனவே அனுப்பியிருந்த முன்மொழிவுகள் தொடர்பாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை சாத்தியக்கூறு ஆய்வு நடத்தியது. இதில் முதலில் தேர்வு செய்யப்பட்ட இடம் விமான நிலைய கட்டுமானத்திற்கு பொருத்தமற்றது என தெரியவந்ததால், மாநில அரசு தற்போது மாற்று இடத்தை முன்மொழிந்துள்ளது.
புதிய இடத்தில் விரைவாக தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு சாத்தியக்கூறு ஆய்வுகளை மேற்கொண்டு, திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு மத்திய மந்திரி சாதகமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது.
மேலும், பத்ராசலம் சீதாராமச்சந்திர சுவாமி கோவிலுக்கு நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவதாகவும், விமான நிலையம் அமைந்தால் பக்தர்களின் போக்குவரத்து வசதி மேம்படுவதுடன், அப்பகுதியின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் ஊக்கமாக அமையும் என்றும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA