Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 23 ஜூன் (ஹி.ச.)
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே காட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த லோகநாதன் (51) என்பவர் தனது விவசாயத் தோட்டத்தில் செவ்வாழை சாகுபடி செய்து வந்தார்.
அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், திடீரென வீசிய பலத்த சூறைக்காற்றுடன் கூடிய கனமழையால் தோட்டத்தில் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவ்வாழை மரங்கள் வேரோடு சாய்ந்து சேதமடைந்தன.
இதனால் பல மாதங்களாக மேற்கொண்ட உழைப்பும், முதலீடும் ஒரே நாளில் பாதிக்கப்பட்டதாக விவசாயி லோகநாதன் வேதனை தெரிவித்தார்.
சேதமடைந்த வாழை மரங்களால் பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தகவலறிந்த வேளாண்மைத் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து சேத விவரங்களை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.
தலைவாசல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய மழை பெய்து வரும் நிலையில், பல இடங்களில் காற்றின் வேகம் அதிகரித்து விவசாயப் பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN