Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 23 ஜூன் (ஹி.ச.)
தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நாள்தோறும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகை தருகின்றனர்.
குறிப்பாக நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நீண்டகால நோய்களுக்காக தொடர் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், மாதந்தோறும் வழங்கப்படும் மருந்துகளை பெற மருத்துவமனைக்கு வருவது வழக்கம்.
இந்த நிலையில், இன்று மருந்துகள் வழங்கும் பிரிவில் அதிகளவில் நோயாளிகள் குவிந்ததால், பலர் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இதனால் முதியவர்கள், பெண்கள் மற்றும் உடல்நலக் குறைபாடுகளால் அவதிப்பட்டு வந்த நோயாளிகள் பெரும் சிரமத்தை சந்தித்தனர்.
மருந்துகளை பெற நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவமனையில் போதிய பணியாளர்கள் இல்லாததே இந்த தாமதத்திற்கு முக்கிய காரணம் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
மேலும், மருந்து விநியோகப் பிரிவில் கூடுதல் ஊழியர்களை நியமித்து, நோயாளிகளுக்கு விரைவாக சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN