சட்டப்பேரவையில் இன்று பதிலுரையாற்றுகிறார் முதலமைச்சர் விஜய்
சென்னை, 23 ஜூன் (ஹி.ச.) முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டம் கடந்த வியாழக்கிழமை அன்று, ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தின் முடிவில் 3 நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறும் என முடிவு செய்யப்
முதலமைச்சர்


சென்னை, 23 ஜூன் (ஹி.ச.)

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டம் கடந்த வியாழக்கிழமை அன்று, ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

தொடர்ந்து நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தின் முடிவில் 3 நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, வெள்ளிக்கிழமை அன்று காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கு எதிராக முதலமைச்சர் விஜய் தனிதீர்மானம் கொண்டுவந்தார்.

அதில் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் சேர்க்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியின் கோரிக்கையையும் முதலமைச்சர் ஏற்ற பிறகு தீர்மானம் ஒர்மனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது.

முதல் நாள் திமுக மற்றும் தவெக எம்.எல்.ஏக்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, சட்டப்பேரவை களேபரமாக காட்சியளித்தது.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையை தொடர்ந்து நேற்று மீண்டும் அவை தொடங்கியதும், புதிய நடுவர் மன்றம் அமைக்கக் கோரியதற்கு அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

அந்த முடிவை திரும்பப் பெற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தன.

அதேநேரம், திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் ஆலையில் அம்மோனியா வாயு கசிவால் வெளிமாநில ஊழியர்கள் உயிரிழந்தது குறித்து விவாதிக்க வேண்டும் என திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது.

ஆனால், அந்த விபத்து குறித்து 110 விதியின் கீழ் அரசு சார்பில் விளக்கம் மட்டுமே அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தான் எதிர்க்கட்சிகளின் அனைத்து கேள்விகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிக்கும் வகையில் தனது உரையை விஜய் இன்று நிகழ்த்துவாரா? என பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இன்றுடன் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P