ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சுங்கச்சாவடியை அகற்றக் கோரி வாகன ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர், 23 ஜூன் (ஹி.ச) விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டியில் புதிதாக திறக்கப்பட்ட சுங்கச்சாவடியை உடனடியாக அகற்ற வலியுறுத்தி வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் இன்று காலை முதல் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்த
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சுங்கச்சாவடியை அகற்றக் கோரி வாகன ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்


ஸ்ரீவில்லிபுத்தூர், 23 ஜூன் (ஹி.ச)

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டியில் புதிதாக திறக்கப்பட்ட சுங்கச்சாவடியை உடனடியாக அகற்ற வலியுறுத்தி வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் இன்று காலை முதல் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சட்ட விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணாக இந்த சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.

குறிப்பாக, இரண்டு சுங்கச்சாவடிகளுக்கு இடையே குறைந்தபட்ச தூரம் இருக்க வேண்டும் என்ற விதியை மீறி நத்தம்பட்டியில் புதிய சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதாகவும், மிகக் குறைந்த தூரத்திற்கு அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

இந்த சுங்கச்சாவடியால் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், தினசரி வாடகை வாகனங்களை நம்பியுள்ள ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

விருதுநகர், மதுரை, தேனி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த டாக்ஸி, வேன், லாரி மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் கூட்டமைப்பு குழுவினர் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் எனவும், உடனடியாக மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு சுங்கச்சாவடியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b