வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
புதுடெல்லி, 23 ஜூன் (ஹி.ச.) இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று வெளியிட்டுள்ள முன்னறிவிப்பின்படி, அசாம், மேகாலயா, சிக்கிம் மற்றும் மேற்கு வங்கத்தின் இமயமலை அடிவாரப் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு
வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு  - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை


புதுடெல்லி, 23 ஜூன் (ஹி.ச.)

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று வெளியிட்டுள்ள முன்னறிவிப்பின்படி, அசாம், மேகாலயா, சிக்கிம் மற்றும் மேற்கு வங்கத்தின் இமயமலை அடிவாரப் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இப்பகுதிகளில் உள்ள ஆறுகளில் நீர்வரத்து அதிகரிக்கவும், தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படவும் வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், இன்று பீகார், அருணாச்சலப் பிரதேசம், கடலோர கர்நாடகா, மத்திய மகாராஷ்டிரா, கோவா, ஒடிசா, தெலங்கானா, கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியான மழை காரணமாக மலைப்பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் உள்ளதால், பயணங்களைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதற்கிடையில், ஹரியானா, பஞ்சாப், சண்டிகர், டெல்லி, உத்தரகாண்ட், ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், கங்கைச் சமவெளி மேற்கு வங்கம், குஜராத், தமிழ்நாடு, அந்தமான் நிக்கோபார் தீவுகள், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் வரும் 25ஆம் தேதி வரை இடியுடன் கூடிய மின்னல் மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீனவர்களுக்கான எச்சரிக்கையாக, மன்னார் வளைகுடா, வங்கக் கடலின் சில பகுதிகள் மற்றும் ஒடிசா, கங்கைச் சமவெளி மேற்கு வங்கக் கடற்கரையோரப் பகுதிகளில் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், இன்று கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழை ஒருபுறம் இருக்க, விதர்பா, கிழக்கு உத்தரப் பிரதேசம், கிழக்கு மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய பகுதிகளில் பகல் நேரத்தில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மாறுபட்ட வானிலை நிலவுவதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வானிலை முன்னறிவிப்புகளைத் தொடர்ந்து கவனித்து, அதற்கேற்ப தங்களை தயார்படுத்திக்கொள்ளுமாறு வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b