Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 23 ஜூன் (ஹி.ச.)
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, விவசாய நிலத்தில் மாடுகளுக்குத் தீவனம் அறுக்கச் சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போச்சம்பள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட மேக்கலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமணமான பெண், நேற்று மதியம் தனது விவசாய நிலத்தில் மாடுகளுக்குத் தேவையான புல் அறுத்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சக்கரவர்த்தி (45) என்பவர் அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, வன்புணர்வு முயற்சியும் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண், அவரிடமிருந்து தப்பித்து வீட்டிற்கு வந்து நடந்த சம்பவத்தை தனது கணவரிடம் தொலைபேசியில் தெரிவித்து கதறி அழுதுள்ளார்.
கணவர் அவரை ஆறுதல் கூறியிருந்தாலும், பட்டப்பகலில் தனக்கு நேர்ந்த அவமானத்தால் கடுமையான மனவேதனைக்குள்ளான பெண், மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அப்போது வீட்டில் இருந்த அவரது மாமனார், மாமியார் சத்தம் கேட்டு உள்ளே சென்று பார்த்தபோது பெண் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு, குடும்பத்தினர் உதவியுடன் போச்சம்பள்ளி அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள சக்கரவர்த்தியை தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவம் மேக்கலாம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam