Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 24 ஜூன் (ஹி.ச.)
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் 52-ஆவது பிறந்தநாளையொட்டி புதிய அரசுப் பேருந்துகள் இயக்கத் தொடக்க விழாவிற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 300 பேருந்துகள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு, மூன்றாவது நாளாக எந்தப் பயன்பாடும் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழகத்தின் 8 போக்குவரத்துக் கழகங்களில் புதிதாக வாங்கப்பட்ட 300 பேருந்துகளை தொடங்கி வைக்கும் விழா ஜூன் 22-ஆம் தேதி சென்னையில் நடைபெறுவதாக அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி நாகர்கோவில், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட 24 நகரங்களில் இருந்து புதிய பேருந்துகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
ஆனால், திட்டமிடப்பட்ட நாளில் விழா நடைபெறாததால், அந்த 300 பேருந்துகளும் கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒவ்வொரு பேருந்துக்கும் இரண்டு ஓட்டுநர்கள் மற்றும் ஒரு நடத்துநர் என சுமார் 900 பணியாளர்கள் சென்னைக்கு வந்த நிலையில், அவர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதிகள் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒரு பேருந்தை சென்னைக்கு கொண்டு வந்து மீண்டும் சொந்த மண்டலத்திற்கு அனுப்புவதற்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை செலவாகும் நிலையில், 300 பேருந்துகளையும் தேவையின்றி இயக்கியதால் போக்குவரத்துக் கழகங்களுக்கு பெரும் நிதிசுமை ஏற்பட்டுள்ளதாக அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
ஏற்கனவே இழப்பில் இயங்கும் போக்குவரத்துக் கழகங்களுக்கு இது கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நாடு எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொண்டுவரும் சூழலில், நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரத்திற்கு பேருந்துகளை வெறுமனே விழாவுக்காக இயக்கியது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
தேவையில்லாமல் சென்னைக்கு வரவழைக்கப்பட்ட பேருந்துகளை உடனடியாக மீண்டும் அந்தந்த மண்டலங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதற்கான உத்தரவை வழங்கிய அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ