ஸ்ரீவாணி டிக்கெட்டில் நேரம் தவறாக அச்சு 300 பக்தர்கள் அவதி- உடனடி நடவடிக்கையால் வி.ஐ.பி. தரிசன ஏற்பாடு
திருமலை , 24 ஜூன் (ஹி.ச.) திருமலையில் ஸ்ரீவாரி தரிசனத்திற்காக வழங்கப்பட்ட ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளில் நேரம் தவறாக அச்சிடப்பட்டதால் சுமார் 300 பக்தர்கள் அவதிக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், தேவஸ்தான அதிகாரிகள் உடனடிய
A


திருமலை , 24 ஜூன் (ஹி.ச.)

திருமலையில் ஸ்ரீவாரி தரிசனத்திற்காக வழங்கப்பட்ட ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளில் நேரம் தவறாக அச்சிடப்பட்டதால் சுமார் 300 பக்தர்கள் அவதிக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இருப்பினும், தேவஸ்தான அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு மாற்று ஏற்பாடுகளை செய்ததால் பக்தர்கள் நிம்மதி அடைந்தனர்.

ஸ்ரீவாரி தரிசனத்திற்காக பக்தர்கள் 3 மாதங்களுக்கு முன்பே ஆன்லைனில் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்தனர். அந்த டிக்கெட்டுகளில் தரிசன நேரம் மாலை 4 மணிக்கு பதிலாக தவறுதலாக அதிகாலை 4 மணி என அச்சிடப்பட்டிருந்தது. இதை நம்பிய சுமார் 300 பக்தர்கள் அதிகாலை 3 மணிக்கே வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ்–1-க்கு வந்தனர்.

அங்கு டிக்கெட்டுகளை பரிசோதித்த தேவஸ்தான ஊழியர்கள், நேரம் தவறாக அச்சிடப்பட்டிருப்பதை கண்டறிந்தனர். இதனால் பக்தர்கள் மத்தியில் குழப்பம் நிலவியது. தகவல் கிடைத்ததும் தேவஸ்தான உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட் பிரிவு ஊழியர்களின் கவனக்குறைவால் இந்த தவறு ஏற்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், டிக்கெட்டில் ஏற்பட்ட பிழையை முன்கூட்டியே கண்டறிந்து சுமார் 200 பக்தர்களுக்கு சரியான நேரம் தெரிவிக்கப்பட்டதாகவும், மீதமுள்ள 300 பேருக்கு தகவல் சென்றடையாததால் அவர்கள் சிரமத்தை சந்தித்ததாகவும் தெரிவித்தனர்.

பின்னர் பாதிக்கப்பட்ட அனைத்து பக்தர்களுக்கும் பரிந்துரை நெறிமுறையின் கீழ் சிறப்பு வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் மூலம் அவர்கள் சிரமமின்றி ஸ்ரீவாரியை தரிசித்து திருப்தியுடன் திரும்பிச் சென்றனர்.

இந்த சம்பவம் காரணமாக எதிர்காலத்தில் டிக்கெட் வழங்கும் நடைமுறைகளில் கூடுதல் கவனம் செலுத்தவும், இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்கவும் தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA