Enter your Email Address to subscribe to our newsletters

ஹைதராபாத் , 24 ஜூன் (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேசத்தில் கூட்டணி அரசில் முக்கிய பங்காளியாக உள்ள ஜனசேனா கட்சி, தற்போது அண்டை மாநிலமான தெலங்கானாவில் தனது அரசியல் அடித்தளத்தை வலுப்படுத்தும் நோக்கில் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, கட்சித் தலைவர் மற்றும் ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண், தெலங்கானாவில் கட்சி சேர்க்கை பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் வகையில் “தெலங்கானா ஜாயினிங்ஸ் கமிட்டி” என்ற 7 பேர் கொண்ட சிறப்பு குழுவை அமைத்துள்ளார்.
இது குறித்து அவர் தனது அறிக்கையில் அவர் கூறுகையில்:
இந்தக் குழுவின் முக்கிய பணியாக, பிற அரசியல் கட்சிகளிலிருந்து வரும் முக்கிய தலைவர்கள் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பங்களை முறையாக பரிசீலித்து ஒருங்கிணைப்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட துறைகளில் உள்ளவர்களை கட்சியில் இணைக்கும் பணியை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் மும்மாரெட்டி பிரேம் குமார், டாக்டர் கடலா ஸ்ரீநிவாஸ் (முன்னாள் மருத்துவ இயக்குநர்), கொட்டிமுக்கல நரேஷ் ரெட்டி, அப்துல் ஹனீஃப், திரைப்பட நடிகர் அல்லாடி தனீஷ், சிராக் பிரஜீத் கவுட் மற்றும் முன்னாள் டிஎஸ்பி மேடூரி சரஸ்வதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் வரும் சேர்க்கை விண்ணப்பங்கள் முதலில் ஜனசேனா கட்சியின் பொதுச் செயலாளர் ராம் தள்ளூரி மூலம் பரிசீலிக்கப்படும் என்றும், அதன் பின்னர் இறுதி ஒப்புதலுக்காக கட்சித் தலைவர் பவன் கல்யாண் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தெலங்கானா மாநிலத்தில் கட்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஹைதராபாத்தில் விரைவில் பெரிய அளவிலான உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA