தமிழகத்தில் 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் பணிகள் தீவிரம்
சென்னை, 24 ஜூன் (ஹி.ச.) தமிழகத்தில் காலியாக உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமு
தலைமைச் செயலகம்


சென்னை, 24 ஜூன் (ஹி.ச.)

தமிழகத்தில் காலியாக உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை மற்றும் விராலிமலை ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் தற்போது காலியாக உள்ளன. இந்தத் தொகுதிகளில் தேர்தலை நடத்துவதற்காக பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரங்கள் பரிசோதனை செய்யப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களின் பரிசோதனை பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. விராலிமலை தொகுதிக்கான இயந்திர பரிசோதனை பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.

மேலும், காலியாக உள்ள தொகுதிகள் அமைந்துள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களிடம் கடந்த ஜூன் 22-ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டிருந்தார்.

மாவட்ட ஆட்சியர்கள் வழங்கியுள்ள அறிக்கைகளின் அடிப்படையில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள், காவல்துறை ஏற்பாடுகள், வாக்காளர் எண்ணிக்கை, வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

இந்த தகவல்களை ஆய்வு செய்த பிறகு, ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இறுதி செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Hindusthan Samachar / VINOTH KUMAR P