Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 ஜூன் (ஹி.ச.)
சென்னையில்
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த தம்பதியரின் 13 வயது மகள் தனது தோழிகளுடன் தினமும் விளையாடச் சென்று வந்துள்ளார்.
அப்போது அதே பகுதியில் வசித்து வந்த 27 வயதுடைய இளைஞர், சிறுமியுடன் பழகி நெருக்கம் ஏற்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.
பின்னர் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பிரியாணி வாங்கிக் கொடுத்து, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.
இதேபோன்று தொடர்ந்து மூன்று முறை பாலியல் வன்கொடுமை செய்ததால் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர், புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் போக்சோ சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சம்பந்தப்பட்ட இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு சென்னை மாவட்ட போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி எஸ். பத்மா விசாரித்தார்.
அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் எஸ். அனிதா ஆஜராகி வாதிட்டார்.
வழக்கின் அனைத்து ஆவணங்கள், மருத்துவ சான்றுகள் மற்றும் சாட்சியங்களை ஆய்வு செய்த நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.
இதையடுத்து குற்றவாளியான இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் நலன் மற்றும் மறுவாழ்விற்காக ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / P YUVARAJ