Enter your Email Address to subscribe to our newsletters

திருச்செந்தூர், 24 ஜூன் (ஹி.ச.)
முன்னாள் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் 103 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக ஆழ்வார்திருநகரி ஒன்றியம் சார்பில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆத்தூரில் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.
இப்பொதுக்கூட்டத்தில் பேசிய திமுகவின் முன்னாள் அமைச்சரும், தற்போதைய திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்ததாக புகார் எழுந்துள்ளது.
இந்த பேச்சு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், கலவரத்தை தூண்டும் நோக்கத்திலும் அமைந்திருந்ததாக கூறி காவல்துறையினர் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அவதூறாக பேசுதல், கலவரத்தை தூண்டும் விதமாக பேசுதல் உள்ளிட்ட மூன்று சட்டப்பிரிவுகளின் கீழ் அனிதா ராதாகிருஷ்ணன் மீது திருச்செந்தூர் காவல்துறையினர் சார்பில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசியல் தலைவர்கள் பொது மேடைகளில் பேசும்போது கண்ணியம் காக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b