Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 ஜூன் (ஹி.ச.)
சென்னையில் கொசுக்களைக் கட்டுப்படுத்தும் முறையில் பெரிய மாற்றத்தை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
வழக்கமாக கொசு ஒழிப்புப் பணிகளுக்கு டீசலுடன் பைத்திரியம் எனும் கொசு மருந்து கலந்து புகை வடிவில் தெளிக்கப்பட்டு வந்தது.
இந்த முறையில் வெளியேறும் புகையால் காற்று மாசுபாடு ஏற்படுவதுடன், மனிதர்களுக்கு சுவாசப் பிரச்சினைகள் உருவாகும் அபாயமும் இருந்தது.
இதனைக் கருத்தில் கொண்டு, வரும் ஜூலை மாதம் முதல் டீசலுக்குப் பதிலாக தண்ணீருடன் கொசு மருந்தைக் கலந்து தெளிக்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த நீர் சார்ந்த தெளிப்பு முறையால் காற்று மாசுபாடு முற்றிலும் தவிர்க்கப்படுவதுடன், மண் மற்றும் நீர்நிலைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த முறையை மாநகரம் முழுவதும் விரிவுபடுத்தி, டெங்கு, மலேரியா உள்ளிட்ட கொசுக்களால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
பொதுமக்களின் உடல்நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய இரண்டையும் ஒருசேர உறுதி செய்யும் இந்தத் திட்டம் ஜூலை முதல் அமலுக்கு வருகிறது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b