அம்மோனியா கசிவால் 10 பேர் பலியான சம்பவம் - இறால் பதப்படுத்தும் தொழில்சாலையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருவள்ளூர், 24 ஜூன் (ஹி.ச.) திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு சம்பவம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் கவிதா இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். தொழிற்சாலை வளாகம் முழுவதும் பார்வையிட்ட அவர
அம்மோனியா கசிவால்  10 பேர் பலியான சம்பவம் - இறால் பதப்படுத்தும் தொழில்சாலையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு


திருவள்ளூர், 24 ஜூன் (ஹி.ச.)

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு சம்பவம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் கவிதா இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தொழிற்சாலை வளாகம் முழுவதும் பார்வையிட்ட அவர், அங்கு நடைபெற்று வரும் மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் கவிதா,

அம்மோனியா கசிவு ஏற்பட்ட இந்த தொழிற்சாலையில் சுமார் 200 டன் அளவிலான இறால்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.

தற்போது அவற்றை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்த விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது.

விபத்து நடந்தபோது தொழிற்சாலையில் குழந்தைத் தொழிலாளர்கள் யாரேனும் பணியில் ஈடுபட்டிருந்தனரா என்பது குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வடமாநிலத் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தவறானது. அனைத்து தொழிலாளர்களுக்கும் உரிய வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

இருப்பினும், தொழிற்சாலையின் பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா என்பது குறித்து விரிவான அறிக்கை தயாரிக்கப்படும்

என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.

இதனிடையே, அம்மோனியா கசிவில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) சார்பில் தொழிற்சாலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொழிற்சாலை நிர்வாகத்தின் அலட்சியமே விபத்துக்கு காரணம் என குற்றம்சாட்டிய சிஐடியு நிர்வாகிகள், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

சம்பவம் தொடர்பாக தொழிலக பாதுகாப்புத்துறை மற்றும் காவல்துறையினர் தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

விபத்து நடந்த பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Hindusthan Samachar / vidya.b