Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 24 ஜூன் (ஹி.ச.)
பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால், இந்தியாவின் தென்மேற்குப் பருவமழை இந்தாண்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நாடு முழுவதும் இதுவரை பெய்ய வேண்டிய மழையளவில் சுமார் 43 சதவீதம் குறைவு பதிவாகியுள்ள நிலையில், 12 மாநிலங்களில் உள்ள 111 மாவட்டங்கள்
“தீவிர கவலைக்குரிய பகுதிகள்” என அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த நிலைமையை சமாளிப்பது தொடர்பாக மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் புதுடெல்லியில் அவசர உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களின் வேளாண் அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) நிபுணர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர்,
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புகளின்படி ஜூலை 2-ஆம் தேதியுடன் முடிவடையும் வாரத்திலும் மழைப்பொழிவு பலவீனமாகவே இருக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.
இதனால் மானாவாரி பகுதிகளில் பயிரிடப்படும் காரிஃப் பயிர்களின் விளைச்சல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் எச்சரித்தார்.
மத்திய அரசு மற்றும் விஞ்ஞானிகள் இணைந்து மேற்கொண்ட ஆய்வில், போதிய பாசன வசதி இல்லாத மற்றும் பருவமழை குறைவால் பாதிக்கப்படக்கூடிய 315 மாவட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவை பாசன வசதியின் அடிப்படையில் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இதில் 12 மாநிலங்களில் உள்ள 111 மாவட்டங்கள் ‘முதன்மை முன்னுரிமை’ (High Priority) பிரிவில் இடம்பெற்றுள்ளன. இந்த மாவட்டங்களில் பாசன வசதி 25 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. மகாராஷ்டிராவில் மட்டும் 20 மாவட்டங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
மேலும், 76 மாவட்டங்கள் ‘நடுத்தர முன்னுரிமை’ பிரிவிலும், 128 மாவட்டங்கள் ‘குறைந்த முன்னுரிமை’ பிரிவிலும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த மாவட்டங்களில் பாசன வசதி முறையே 25 முதல் 50 சதவீதம் வரை மற்றும் அதற்கு மேல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, பீகார், தெலுங்கானா, ஜார்கண்ட், ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிஷா உள்ளிட்ட மாநிலங்கள் அதிக பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நெருக்கடி நிலை ஏற்படும் வரை காத்திருக்காமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதே மேற்கொண்டு வருகிறோம் என்று அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.
இதற்காக ICAR தயாரித்துள்ள மாவட்ட வாரியான அவசரகால வேளாண் திட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, குறைந்த மழைப்பொழிவு பகுதிகளில் மாற்றுப் பயிர்களை ஊக்குவித்தல், பயிர் பன்முகத்தன்மை உத்திகளை செயல்படுத்தல் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் நீர் சேகரிப்பு, குளங்கள் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளுக்கு முன்னுரிமை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P