Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 ஜூன் (ஹி.ச.)
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் விநாயகமூர்த்தியின் வீடு மற்றும் அவர் தங்கியிருந்த வாடகை இல்லத்தில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் நடத்திய சோதனை இரவு நிறைவடைந்தது.
இன்று காலை வியாசர்பாடி பி.வி. காலனி பகுதியில் உள்ள விநாயகமூர்த்தியின் வீட்டிற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர்.
அப்போது விநாயகமூர்த்தி வீட்டில் இல்லாததால், அவரது தம்பி சுபாஷிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, விநாயகமூர்த்தி சென்னை பெரவள்ளூர் எஸ்.ஆர்.பி. காலனி 14-வது தெருவில் உள்ள வாடகை வீட்டில் தங்கி வருவது தெரியவந்தது. தொடர்ந்து அந்த முகவரிக்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கு சோதனையில் ஈடுபட்டனர்.
காலை தொடங்கிய இந்த சோதனை இரவு 10 மணி வரை நீடித்தது. பின்னர் சோதனை நிறைவடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சோதனையின் போது அதிகாரிகள் சில ஆவணங்களை ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், சோதனையில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் அல்லது சோதனைக்கான காரணம் குறித்து அமலாக்கத்துறை சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
Hindusthan Samachar / P YUVARAJ