Gen Z இளைஞர்களை அச்சுறுத்த காவல் துறையை பயன்படுத்துகிறதா அரசு?– உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு
தமிழ்நாடு, 24 ஜூன் (ஹி.ச.) கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில், கழகத்தின் Gen Z இளைஞர்களை ஒருங்கிணைத்து கூட்டங்கள் நடத்தி வந்த அன்பானந்தன் அரியப்பனை, அவரது வீட்டுக்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து காவல்துறையினர் கைது செய்ய முயற்சித்ததாக எதிர்க்
உதயநிதி


தமிழ்நாடு, 24 ஜூன் (ஹி.ச.)

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில், கழகத்தின் Gen Z இளைஞர்களை ஒருங்கிணைத்து கூட்டங்கள் நடத்தி வந்த அன்பானந்தன் அரியப்பனை, அவரது வீட்டுக்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து காவல்துறையினர் கைது செய்ய முயற்சித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்,

சமீபத்தில் Gen Z கூட்டத்தில் பேசிய கனி என்ற இளைஞர் மீது சைதாப்பேட்டையில் த.வெ.க.வினர் கொலைவெறி தாக்குதல் நடத்தியதாகவும், தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக இதுவரை காவல்துறை எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கனியை காவல்துறையினர் மிரட்டி டிஸ்சார்ஜ் செய்ய வைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆளுங்கட்சியையும் அரசையும் விமர்சித்து பேசும் இளைஞர்களுக்கு எதிராக காவல்துறையை பயன்படுத்துவதாகவும், ஆனால் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

இளைஞர்கள் மத்தியில் அரசின் செல்வாக்கு குறைந்து வருவதால் ஆட்சியாளர்கள் அடக்குமுறையை கையில் எடுத்துள்ளதாக குற்றம்சாட்டிய உதயநிதி ஸ்டாலின், கழக இளைஞர்களை காவல்துறை மூலம் அச்சுறுத்த முயன்றால் அதை கழகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam