Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 24 ஜூன் (ஹி.ச.)
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட போதைப்பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்ததாக அரசு விரைவு பேருந்து நடத்துனர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், தென்காசி மாவட்டம் முழுவதும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, பாவூர்சத்திரம் காவல் ஆய்வாளர் வேல்கனி, உதவி ஆய்வாளர் ராஜேஷ்குமார் மற்றும் போலீசார் திருநெல்வேலி–தென்காசி சின்னதம்பிநாடார்பட்டி சாலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த மூன்று பேரை பிடித்து சோதனை செய்ததில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் குட்கா பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், திப்பணம்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த வெற்றிவேல் (46), திப் மீனாட்சிபுரம் வேதக்கோவில் தெருவைச் சேர்ந்த பொன்னுத்துரை (43), திப்பணம்பட்டி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த தனவேல் (46) ஆகியோர் விற்பனைக்காக இப்பொருட்களை வைத்திருந்தது தெரியவந்தது.
மூவரையும் கைது செய்த போலீசார், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும், விசாரணையில் முத்துபாண்டி என்பவர் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வருவதும், பணிநிமித்தமாக பெங்களூரு செல்லும் அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது புகையிலை மற்றும் போதைப்பொருட்களை மறைமுகமாக கடத்தி வந்து, பாவூர்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P