ஜெ. சொத்துகுவிப்பு வழக்கு- மூதாட்டி தாக்கல் செய்த மனு தள்ளுபடி
சென்னை, 24 ஜூன் (ஹி.ச.) கடந்த 1991-96ஆம் ஆண்டு காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த பெங்களூர
Madras High Court


சென்னை, 24 ஜூன் (ஹி.ச.)

கடந்த 1991-96ஆம் ஆண்டு காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக முடக்கப்பட்ட சொத்துக்களை பத்திர பதிவு செய்யக்கூடாது என வாலாஜாபாத் சார் பதிவாளருக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கடந்த 2021 பிப்ரவரி 27ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், ஊத்துக்காடு கிராமத்தில் தனக்கு சொந்தமான 2.15 ஏக்கர் நிலமும் முடக்கப்பட்டுள்ளதாகவும், அந்த முடக்கத்தை நீக்கக்கோரி, வாலாஜாபாத், ஆறுமுகப்பேட்டையை சேர்ந்த 68 வயது மூதாட்டி கம்சலா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் கடனுக்கு அடமானமாக வைக்கப்பட்ட நிலத்தை பொது ஏலத்தில் வாங்கியதாகவும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்குக்கும், தனது சொத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும், தன் சொத்து முடக்கத்தை நீக்க வேண்டும்; அந்த சொத்து தொடர்பாக பத்திரப்பதிவு எதுவும் மேற்கொள்ளக்கூடாது எனவும், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் அல்லது அந்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், சொத்து குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் விதித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

எனவே, அந்த தீர்ப்பின் அடிப்படையில் முடக்கப்பட்ட சொத்துக்களை பத்திர பதிவு செய்யக்கூடாது என வாலாஜாபாத் சார் பதிவாளருக்கு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவில் சட்டவிரோதம் ஏதும் இல்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதேசமயம் அந்த உத்தரவில் சொத்து முடக்கத்தை எதிர்த்து சட்டப்படி நிவாரணம் பெற மனுதாரருக்கு அனுமதி அளித்துள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN