Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 24 ஜூன் (ஹி.ச.)
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வயலூர் ஊராட்சிக்கு உட்பட்ட காரைத்திட்டு கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி, புதுப்பட்டினத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.
வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால் அதிகாலை வயல்வெளிப் பகுதிக்கு சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரன் (20) மற்றும் அஜய் (27) ஆகியோர் அவரை பின்தொடர்ந்ததாக கூறப்படுகிறது.
சிறுமியை மிரட்டி, வாயில் துணி திணித்து அருகிலிருந்த வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் எதிர்த்து போராடிய சிறுமியை தாக்கிவிட்டு இருவரும் தப்பிச் சென்றதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நீண்ட நேரமாக மகள் வீடு திரும்பாததால் தேடிய தந்தை, ஒரு வீட்டின் மொட்டை மாடியில் மயக்க நிலையில் கிடந்த சிறுமியை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பின்னர், மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த மகேஸ்வரன் மற்றும் அஜய் ஆகியோரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மகேஸ்வரன், திருக்கழுக்குன்றம் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருவதாகவும், அஜய் மரக்காணம் பகுதியில் உள்ள இறால் பண்ணையில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருவதாகவும் தெரியவந்துள்ளது.
இருவர் மீதும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பாக மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam