Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 ஜூன் (ஹி.ச.)
தமிழ் இலக்கியம் மற்றும் திரையுலகில் அழியாத முத்திரை பதித்த கவியரசு கண்ணதாசன் அவர்களின் 100-வது பிறந்த நாளையொட்டி, சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் அமைந்துள்ள அவரது சிலை அருகே தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், நிதியமைச்சர் மரிய வில்சன், தொழில்நுட்பத் துறை அமைச்சர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கண்ணதாசனின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்,
20-ஆம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற கவிஞர் கண்ணதாசன். கவிஞர்களுக்கெல்லாம் பேராசானாக விளங்கிய அவர், தொடாத துறையும் எடுத்துரைக்காத பொருளும் இல்லை என்ற அளவுக்கு தமிழர்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் தனது கவிதைகளின் மூலம் வெளிப்படுத்தியவர் என்று புகழாரம் சூட்டினார்.
மேலும், அவரை புரட்சித்தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரன் அரசவைக் கவிஞராக நியமித்தார். லயோலா கல்லூரியில் படித்த காலத்தில் அவரை பல நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்ற அனுபவம் எனக்கு உள்ளது.
மிகவும் எளிமையானவராகவும் அன்பானவராகவும் இருந்தார் என நினைவுகூர்ந்தார்.
ஒரு நிகழ்ச்சியில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, “பார்த்தேன், சிரித்தேன், பக்கம் வரத் துடித்தேன்” என்ற பாடலை கண்ணதாசன் பாடிய சம்பவத்தையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
இறுதிக் காலங்களில் இந்து தர்மத்தின் மகத்துவத்தை எடுத்துரைக்கும் நூல்களையும், இயேசு காவியம் போன்ற படைப்புகளையும் எழுதி அனைத்து தரப்பு மக்களின் பாராட்டையும் பெற்றதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.
மேலும், “தமிழின் மீது அளவற்ற பற்று கொண்டிருந்த கண்ணதாசன் இன்னும் சில காலம் வாழ்ந்திருக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் ஏங்கினர். அவரது நூற்றாண்டு பிறந்த நாளில் முதலமைச்சர் சார்பில் மரியாதை செலுத்துவது எங்களின் கடமை என்று தெரிவித்தார்.
நிகழ்வில் கண்ணதாசனின் இலக்கியப் பங்களிப்புகள், தமிழ் மொழி மீதான அவரது அர்ப்பணிப்பு மற்றும் திரையிசை உலகில் அவர் ஏற்படுத்திய தாக்கம் குறித்து பலரும் நினைவுகூர்ந்தனர். அவரது பாடல்களும் படைப்புகளும் தலைமுறைகளைத் தாண்டி தமிழர்களின் மனங்களில் தொடர்ந்து வாழ்ந்து வருவதாகவும் பேசப்பட்டது.
Hindusthan Samachar / P YUVARAJ