Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 ஜூன் (ஹி.ச.)
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்தில் நடைபெறவுள்ள புதிய பேருந்துகள் தொடக்க விழாவிற்காக தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 300 அரசு பேருந்துகள் கடந்த 22-ஆம் தேதி போக்குவரத்து கழக அதிகாரிகளின் உத்தரவின்பேரில் அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு பேருந்துக்கு மூன்று பணியாளர்கள் என்ற அடிப்படையில் சுமார் 900 அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள் மற்றும் நடத்துனர்கள் சென்னை வந்துள்ளனர்.
இதற்காக பல கிலோமீட்டர் தூரம் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டதால் எரிபொருள் செலவும் இலட்சக்கணக்கில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பேருந்துகள் தொடக்க விழா நடைபெறாததால் கிளாம்பாக்கத்தில் தங்கியுள்ள டிரைவர்கள் மற்றும் நடத்துனர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அவர்களுக்கு போதிய தங்குமிடம், ஓய்வு வசதி மற்றும் அடிப்படை ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதன் காரணமாக சில பணியாளர்கள் கடும் வெயிலிலும் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகளின் அடிப்பகுதியில் படுத்து ஓய்வெடுக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு உடனடியாக தங்குமிடம், குடிநீர் மற்றும் ஓய்வு வசதிகளை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிரைவர்கள் மற்றும் நடத்துனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam