நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிரந்தர கிடங்குகள் அமைக்க கோரிய வழக்கு -உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, 24 ஜூன் (ஹி.ச.) தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் அறிவியல் அடிப்படையிலான சேமிப்பு வசதிகளை ஏற்படுத்தும் வகையில் நிரந்தர கிடங்குகள் அமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கில்,
உயர்நீதிமன்றம்


மதுரை, 24 ஜூன் (ஹி.ச.)

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் அறிவியல் அடிப்படையிலான சேமிப்பு வசதிகளை ஏற்படுத்தும் வகையில் நிரந்தர கிடங்குகள் அமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத் தலைவர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூரைச் சேர்ந்த அமிர்தராஜ் ஹமீதுதீன் தாக்கல் செய்த மனுவில்,

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லை மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க நிரந்தர சேமிப்பு கிடங்குகள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

மேலும், நெல் சேமிப்பு, பராமரிப்பு, கையாளுதல், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு தொடர்பாக நிலையான வழிகாட்டுதல்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தவும், சேமிப்பு குறைபாடுகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் R. சதீஷ் குமார் மற்றும் J. ஜோதிராமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், “மனுதாரர் குறிப்பிட்டுள்ள இடம் மட்டுமின்றி பல மாவட்டங்களிலும் இந்தப் பிரச்சனை நிலவுகிறது. ஒரே நாள் பெய்யும் மழையால் விவசாயிகளின் பல மாத உழைப்பு வீணாகி பெரும் இழப்பு ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்” என்று கருத்து தெரிவித்தனர்.

மேலும், இது அரசின் கொள்கை முடிவுகளுடன் தொடர்புடைய விவகாரம் என்பதால், வழக்கு தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத் தலைவர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P