ஆர்.டி.ஐ. திருத்தங்களை திரும்ப பெறாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் - அன்னா ஹசாரே எச்சரிக்கை
மும்பை , 24 ஜூன் (ஹி.ச.) மகாராஷ்டிரா மாநிலத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்ட (ஆர்.டி.ஐ.) விதிகளில் கொண்டு வரப்பட்ட புதிய திருத்தங்களை உடனடியாக திரும்ப பெறாவிட்டால், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே எச்சரிக்கை
A


மும்பை , 24 ஜூன் (ஹி.ச.)

மகாராஷ்டிரா மாநிலத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்ட (ஆர்.டி.ஐ.) விதிகளில் கொண்டு வரப்பட்ட புதிய திருத்தங்களை உடனடியாக திரும்ப பெறாவிட்டால், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மகாராஷ்டிரா அரசு சமீபத்தில் ஆர்.டி.ஐ. விதிகளில் சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, விண்ணப்பக் கட்டணம் ரூ.10-இல் இருந்து ரூ.30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், தகவல் கோரும் மனுவுடன் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என்ற புதிய விதியும் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதோடு சில கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மாற்றங்கள், 2005-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே பாதிக்கும் வகையில் உள்ளதாக அன்னா ஹசாரே குற்றம்சாட்டியுள்ளார்.

தகவல் பெறும் உரிமையை குறைக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிசுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “ஆர்.டி.ஐ. என்பது அரசுக்கு வருவாய் ஈட்டும் சட்டம் அல்ல. தவறான தகவல் தரும் அதிகாரிகளுக்கு அபராதம் உயர்த்தப்படாமல், பொதுமக்களிடம் கட்டணம் உயர்த்துவது ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

மேலும், விண்ணப்பதாரர்கள் அடையாள அட்டை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டால், தகவல் கோருவோரின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் எனவும், இதனால் ஊழலை வெளிக்கொணரும் சமூக ஆர்வலர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

வழக்கு விசாரணைகளில் வக்கீல் உதவி பெறக்கூடாது என்ற விதியும் கண்டிக்கத்தக்கது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த திருத்தங்களை அரசு திரும்ப பெறாவிட்டால், ஜூலை 5-ம் தேதி அகில்யாநகர் மாவட்டம் ராலேகான் சித்தியில் உள்ள யாதவ் பாபா கோவிலில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அன்னா ஹசாரே அறிவித்துள்ளார்.

20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆர்.டி.ஐ. சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், அவை தகவல் வெளிப்படைத்தன்மையை பாதிக்கும் என சமூக ஆர்வலர்கள் மத்தியில் கவலை எழுந்துள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA