சென்னை விமான நிலையத்தில் ரூ.6.53 கோடி மதிப்பிலான போதைப்பொருள் மற்றும் தங்கம் பறிமுதல்
சென்னை, 24 ஜூன் (ஹி.ச.) சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.6.53 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சா மற்றும் தங்கப்பசை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக
Narcotics and gold worth ₹6.53 crore seized


சென்னை, 24 ஜூன் (ஹி.ச.)

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.6.53 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சா மற்றும் தங்கப்பசை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இரு வெவ்வேறு வழக்குகளில் பயணிகள் சிக்கியுள்ளனர்.

முதல் சம்பவத்தில், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணித்த கேரளாவைச் சேர்ந்த பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரது உடைமைகளை தீவிரமாக சோதனையிட்டனர்.

அப்போது, மிகவும் நுட்பமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 6 கிலோ எடையுள்ள உயர் ரக கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. பன்னாட்டு சந்தையில் இதன் மதிப்பு சுமார் ரூ.6 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, போதைப்பொருளை கடத்தி வந்த கேரள பயணியை அதிகாரிகள் கைது செய்து, தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர் எந்த கடத்தல் கும்பலுக்காக செயல்பட்டார் என்பது குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல், துபாயில் இருந்து சென்னை வந்த மற்றொரு விமானத்தில் பயணித்த பயணியிடம் இருந்து 414 கிராம் எடையுள்ள தங்கப்பசை பறிமுதல் செய்யப்பட்டது.

சோதனையை தவிர்க்கும் நோக்கில் பசை வடிவில் உருமாற்றி உடலில் மறைத்து கடத்த முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.53 லட்சம் ஆகும்.

சமீப காலமாக சென்னை விமான நிலையம் வழியாக போதைப்பொருள் மற்றும் தங்கம் கடத்தல் முயற்சிகள் அதிகரித்து வருவதை அடுத்து, சுங்கத்துறை மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

குறிப்பாக தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து வரும் விமானங்களில் வரும் பயணிகள் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

இந்த தொடர் நடவடிக்கைகள் கடத்தல் கும்பலுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / vidya.b