கிரேன் மூலம் மின்வாரிய கேபிள்கள் திருட்டு - ஒருவர் கைது
செங்கல்பட்டு, 24 ஜூன் (ஹி.ச.) சென்னையை அடுத்த பல்லாவரம் மேற்கு மின்வாரிய பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்காக, ஜிஎஸ்டி சாலையில் உள்ள ஒலிம்பியா அடுக்குமாடி குடியிருப்பு அருகே, 500 மீட்டர் நீளமுள்ள ஒரு கேபிள் ட்ரம் மற்றும்
TNEB Cable


செங்கல்பட்டு, 24 ஜூன் (ஹி.ச.)

சென்னையை அடுத்த பல்லாவரம் மேற்கு மின்வாரிய பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்காக, ஜிஎஸ்டி சாலையில் உள்ள ஒலிம்பியா அடுக்குமாடி குடியிருப்பு அருகே, 500 மீட்டர் நீளமுள்ள ஒரு கேபிள் ட்ரம் மற்றும் 400 மீட்டர் நீளமுள்ள மற்றொரு கேபிள் ட்ரம் என மொத்தம் 900 மீட்டர் நீளமுள்ள மின் புதைவட கேபிள்கள் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் கிரேன் உதவியுடன் கேபிள்களை லாரியில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர். அதன் மதிப்பு 17.35 லட்சம் என மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த மின்வாரிய அதிகாரிகள், இதுகுறித்து பல்லாவரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், TN-04-P-8859 என்ற பதிவு எண்ணுடைய லாரியில் மின் கேபிளை திருடிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திலிருந்து ஆரம்பித்து அந்த லாரி சென்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வுசெய்த போலீசார், அந்த லாரி சென்னை ரெட்டேரி பகுதிவரை சென்று திரும்பியதை கண்டறிந்தனர். இதனால் அந்த பகுதிக்குச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் திருடப்பட்ட கேபிள்கள் அந்த பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவரிடம் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து சண்முகத்திடம் விசாராணை நடத்தியதில், சிலரிடமிருந்து கேபிள்களை விலைக்கு வாங்கியதாக அவர் ஒப்புக்கொண்டார்.

அரசுக்கு சொந்தமான பொருளை திருடர்களிடமிருந்து வாங்கிய குற்றத்திற்காக அவர்மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், சண்முகத்தை கைதுசெய்து அவர்மீது வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஆனால், கிரேன் உதவியுடன் கேபிள்களை லாரியில் ஏற்றி கடத்திச்சென்ற முக்கிய குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. மேலும் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் லாரியும் இதுவரை பறிமுதல் செய்யப்படவில்லை.

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், தொடர் மின்வெட்டால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், மின் விநியோகத்தை சீராக்க மின்வாரிய அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Hindusthan Samachar / ANANDHAN