கல்குவாரி வெடிவைப்பால் அச்சத்தில் வாழும் சி.பள்ளிப்பட்டி மக்கள் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தர்மபுரி, 24 ஜூன் (ஹி.ச.) தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள சி.பள்ளிப்பட்டி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் சிலர் தோட்டப் பகுதிகளில் வசித்து வரும் நிலையில், அவர்களது குடியிருப்புகளுக்கு அருகில் செயல்
கல்குவாரி


தர்மபுரி, 24 ஜூன் (ஹி.ச.)

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள

சி.பள்ளிப்பட்டி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இதில் சிலர் தோட்டப் பகுதிகளில் வசித்து வரும் நிலையில், அவர்களது குடியிருப்புகளுக்கு அருகில் செயல்பட்டு வரும் கல்குவாரியில் தினமும் வெடி வைக்கப்படுவதால் பெரும் பாதிப்புகள் ஏற்படுவதாக குற்றம்சாட்டுகின்றனர்.

குவாரியில் நடைபெறும் வெடிவைப்பால் வீடுகள் அதிர்வதுடன், மண் தூசுகள் காற்றில் பரவி சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதாகவும், கால்நடைகள் மற்றும் வீடுகள் மீது கற்கள் விழும் அபாயம் நிலவுவதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் நடைபெறும் வெடிவைப்பால் நில அதிர்வுகள் ஏற்பட்டு, நிம்மதியாக உறங்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டும் பொதுமக்கள், கல்குவாரி நடவடிக்கைகளை உடனடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், கனிம வளங்களை வெட்டி எடுக்கும் நடவடிக்கைகளில் அரசு தலையிட்டு சுற்றுச்சூழலையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றும் சி.பள்ளிப்பட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam