Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 ஜூன் (ஹி.ச.)
முதலமைச்சரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சென்னைக்கு வரவழைக்கப்பட்ட அனைத்து பேருந்துகளையும் உடனடியாக புதிய வழித்தடங்களில் இயக்கிடுவதோடு, இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் இன்று கூறியிருப்பதாவது,
தமிழக முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளையொட்டி புதிய வழித்தடங்களில் பேருந்துகளை இயக்குவதற்கான தொடக்கவிழாவுக்கு தமிழகமெங்கும் இருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்ட 300 அரசுப் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மூன்றாவது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முதலமைச்சர் பிறந்தநாளுக்காக போக்குவரத்துத்துறை அதிகாரிகளின் மூலம் கடந்த 22 ஆம் தேதி சென்னைக்கு வரவழைக்கப்பட்ட பேருந்துகளை இயக்குவது குறித்தோ, மீண்டும் அனுப்புவது குறித்தோ இதுவரை எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படாத காரணத்தினால், அப்பேருந்துகளை இயக்கி வந்த ஓட்டுநர்களும், நடத்துனர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.
தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்கள் ஏற்கனவே பல்வேறு விதமான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், முதலமைச்சரின் பிறந்தநாள் எனும் பெயரில் கூடுதல் நிதி இழப்பை ஏற்படுத்தும் வகையில் 300 அரசுப் பேருந்துகளையும், அதன் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களையும் தேவையின்றி சென்னைக்கு அழைத்து வந்து காத்திருக்க வைத்திருப்பது எந்த வகையில் நியாயம்?
தமிழகம் முழுவதும் காலாவதியான நிலையில் எப்போது வேண்டுமானாலும் விபத்துக்குள்ளாகும் என்ற ஆபத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அரசுப் பேருந்துகளை சீரமைப்பது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், ஏற்கனவே ஓடிக் கொண்டிருக்கும் பேருந்துகளையும் சென்னைக்கு வரவழைத்து நிறுத்தி வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, முதலமைச்சரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சென்னைக்கு வரவழைக்கப்பட்ட அனைத்து பேருந்துகளையும் உடனடியாக புதிய வழித்தடங்களில் இயக்கிடுவதோடு, போக்குவரத்துக் கழகத்திற்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையிலான இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போக்குவரத்துத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b