Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 ஜூன் (ஹி.ச.)
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கையை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பதிவாகியுள்ள நிலையில், அதிகபட்சமாக சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் 44 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தில் 30 மில்லிமீட்டரும், பெரம்பலூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் 20 மில்லிமீட்டர் வரை மழை பதிவாகியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட உள் தமிழக பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 27 ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் 28 ஆம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் கடலூரில் 38.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை கோயம்புத்தூர் விமான நிலையத்தில் 22.5 டிகிரி செல்சியஸாகவும், உதகமண்டலத்தில் 12.4 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் ஜூன் 24 முதல் 28 ஆம் தேதி வரை மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P