Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 ஜூன் (ஹி.ச.)
சமூகத்தில் பாதுகாப்பும் ஆதரவும் தேவைப்படும் நலிவடைந்த பிரிவினருக்கு உதவும் நோக்கில், தமிழக அரசின் தாயுமானவர் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு வீடு தேடிச் சென்று ரேஷன் பொருட்களை வழங்கி வரும் இத்திட்டத்தில், புதிதாக 50 வயதுக்கு மேற்பட்ட தனித்து வாழும் பெண்கள் மற்றும் திருநங்கைகளையும் இணைக்க அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சமூகத்தில் ஆதரவற்ற நிலையில் உள்ள, பொருளாதார மற்றும் சமூக பாதுகாப்பு தேவைப்படும் பிரிவினரை அடையாளம் கண்டு அவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை நேரடியாகக் கொண்டு சேர்ப்பதே இந்த விரிவாக்கத்தின் முக்கிய நோக்கமாகும்.
இதன் மூலம் வயதானோர் மட்டுமின்றி, துணையின்றி வாழும் பெண்கள் மற்றும் திருநங்கை சமூகத்தினரும் வீட்டு வாசலிலேயே ரேஷன் பொருட்களைப் பெற முடியும்.
திட்டத்தில் புதிதாக இணையவுள்ள பயனாளிகளின் முழுமையான பட்டியல் மற்றும் தகுதி விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, தாயுமானவர் திட்டப் பயனாளிகளுக்கு எந்தவித தாமதமும் இன்றி பொருட்கள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் ஜூலை மாதத்திற்கான ரேஷன் பொருட்களை முன்கூட்டியே இருப்பு வைக்குமாறு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
தற்போது 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மட்டுமே செயல்படுத்தப்பட்டு வரும் இந்த வீடு தேடி ரேஷன் வழங்கும் முறை, விரிவாக்கத்திற்குப் பிறகு மேலும் பல்லாயிரக்கணக்கானோருக்குப் பயனளிக்கும் எனக் கருதப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b