திருவல்லிக்கேணியில் போதை மாத்திரைகள் பதுக்கிய 3 பேர் கைது - 55,280 மாத்திரைகள் பறிமுதல்
சென்னை, 24 ஜூன் (ஹி.ச) சென்னையில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில், போதைக்காக பயன்படுத்தப்படும் தடைசெய்யப்பட்ட மருந்து மாத்திரைகளை வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 55,
Tablets


சென்னை, 24 ஜூன் (ஹி.ச)

சென்னையில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில், போதைக்காக பயன்படுத்தப்படும் தடைசெய்யப்பட்ட மருந்து மாத்திரைகளை வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து 55,280 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் A. அமல்ராஜ் உத்தரவின் பேரில், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு (ANIU) மற்றும் காவல் மாவட்ட அதிகாரிகள் இணைந்து போதைப்பொருள் குற்றங்களுக்கு எதிராக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மருத்துவரின் பரிந்துரையின்றி விற்பனை செய்யக் கூடாத Schedule-H மருந்துகளை டெல்லியில் இருந்து சட்டவிரோதமாக வாங்கி, கூரியர் மூலம் சென்னைக்கு கடத்தி வந்து பின்னர் வெளிநாடுகளுக்கு அனுப்பத் திட்டமிட்டிருப்பதாக ANIU போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கடந்த ஒரு மாதமாக சந்தேக நபர்களின் நடமாட்டத்தை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

விசாரணையில், சென்னையில் உள்ள ஒரு தனியார் கூரியர் நிறுவனத்திலிருந்து பெரிய அளவிலான போதை மாத்திரைகள் அடங்கிய பார்சல் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து ANIU மற்றும் D-1 திருவல்லிக்கேணி காவல் நிலைய போலீசார் இணைந்து, திருவல்லிக்கேணி பச்சையப்பன் தெருவில் நேற்று ரகசிய கண்காணிப்பு மேற்கொண்டனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்ததில், அவர்கள் சையது அபுதாகிர் (50), முகமது ரத்தீஸ் (44), முஜாஹிதீன் (31) என்பது தெரியவந்தது.

அவர்களிடமிருந்து 51,300 Alprazolam மாத்திரைகள் மற்றும் 3,980 Zolpidem மாத்திரைகள் என மொத்தம் 55,280 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

போலீஸ் விசாரணையில், கைது செய்யப்பட்ட முஜாஹிதீன் வெளிநாடுகளுக்கு துணி வியாபாரம் செய்வது போல் நடித்து, துணிகளுக்கு இடையே இந்த மாத்திரைகளை மறைத்து கடத்த முயன்றது தெரியவந்துள்ளது.

வெளிநாடுகளில் உள்ள சில தனியார் மருந்தகங்களுக்கு அவற்றை விநியோகிக்க திட்டமிட்டிருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட Alprazolam மற்றும் Zolpidem போன்ற மருந்துகள் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டால் உடல்நலத்திற்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், பொதுமக்கள் அவற்றை மருத்துவரின் ஆலோசனையின்றி பயன்படுத்த வேண்டாம் என காவல்துறை எச்சரித்துள்ளது.

கைது செய்யப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ